பாரிமுனையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து 29 ஆயிரம் இணைப்புகள் பாதிப்பு

பாரிமுனையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனால் 29 ஆயிரம் சேவை இணைப்புகள் பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-01 22:00 GMT
பிராட்வே,

சென்னை பாரிமுனை கிருஷ்ணன் கோவில் தெருவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் அமைந்துள்ளது. 7 மாடிகள் கொண்ட இந்த அலுவலகம் மூலம் பூக்கடை, துறைமுகம் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் தரைவழி (லேண்ட்லைன்) மற்றும் செல்போன்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கட்டிடத்தில் தமிழக அரசின் அம்மா கால்சென்டரும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த கேபிள்களில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த அலுவலக காவலர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்ததையடுத்து, ஐகோர்ட்டு, ராயபுரம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மேலும் சம்பவ இடத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அலுவலகத்தில் முழு சோதனை நடத்தப்பட்ட பின்பே சேதவிவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்தில் பி.எஸ்.என்.எல். சர்வர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதால், பூக்கடை, துறைமுகம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன், லேண்ட்லைன், அகண்ட அலைவரிசை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த திடீர் தீ விபத்தால் பூக்கடை, துறைமுகம் பகுதியில் செயல்பட்டு வந்த 29 ஆயிரம் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தமிழக ஐ.டி. துறை செயலாளர் சந்தோஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து குறித்து பி.எஸ்.என்.எல். சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள துறைமுக பகுதிக்கான பி.எஸ்.என்.எல். எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவினாலே தீ விபத்து ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் சுமார் 35 ஆயிரம் இணைப்புகளை வினியோகம் செய்யும் திறன் கொண்டது. தற்போது 29 ஆயிரம் தரைவழி (லேண்ட்லைன்) இணைப்புகளும், 3 ஆயிரம் பிராட்பேண்ட் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் துறைமுகம் பகுதியில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்