ஜமீன்ஊத்துக்குளியில் செயல்பட்டு வந்த போலி உர குடோனுக்கு வருவாய் துறையினர் ‘சீல்' - 197 மூட்டைகள் பறிமுதல்
ஜமீன்ஊத்துக்குளியில் செயல்பட்டு வந்த போலி உர குடோனுக்கு வருவாய் துறையினர் ‘சீல்' வைத்தனர். அங்கிருந்த 197 மூட்டை உரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு ஆனைமலையை சேர்ந்த தேவராஜ் என்பவர் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு போலியாக உரம் தயாரிப்பதாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் அந்த உர குடோனை ஆய்வு செய்ய வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தாசில்தார்கள் தணிகவேல், வெங்கடாச்சலம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உரங்களை சோதனை செய்த போது போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோழிக்கழிவுகள், எம்சாண்ட் (பாறை துகள்), சாணம், பொட்டாச்சியம், யூரியா ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தெற்கு ஒன்றிய வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வேளாண்மை அலுவலர் துளசிமணி விரைந்து வந்து ஆய்வு செய்தார். ஆய்வு செய்ததில் குடோனில் உள்ள உரங்கள், விவசாயத்திற்கு பயன்படுத்த தகுதி இல்லாதவை என்பது தெரியவந்தது. மேலும் 40 கிலோ உரத்தை ரூ.600 க்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.
இதை தொடர்ந்து குடோனில் இருந்த சூப்பர் 69 உரம் 10 மூட்டை, மைக்ரோ புட் உரம் 10 மூட்டை உள்பட 197 மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடோனுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில், குடோனில் இருந்து உரங்கள் மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இவற்றை கோவையில் உள்ள ஆர்கானிக் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவில் போலி தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்ததால் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.