சட்டசபையின் கண்ணியத்தை காப்பாற்றுவேன் சபாநாயகர் காகேரி பேச்சு
சட்டசபையின் கண்ணியத்தை காப்பாற்றுவேன் என்று புதிய சபாநாயகர் காகேரி கூறினார்.
பெங்களூரு,
சட்டசபையின் கண்ணியத்தை காப்பாற்றுவேன் என்று புதிய சபாநாயகர் காகேரி கூறினார்.
கர்நாடக சட்டசபையில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பிறகு விஸ்வேசுவர ஹெக்டே காகேரி பேசியதாவது:-
கண்ணியத்தை காப்பாற்றுவேன்
நான் போராட்டங்கள் மூலம் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். 1990-ம் ஆண்டு பா.ஜனதா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதன் பிறகு கட்சியில் பல்வேறு பதவிகளை நிர்வகித்தேன். எடியூரப்பா, அனந்தகுமாரின் வழிகாட்டுதலில் இந்த உயரத்தை அடைய முடிந்தது.
நான் முதல் முறையாக இந்த சபைக்கு எம்.எல்.ஏ.வாக வந்தபோது, ரமேஷ்குமார் சபாநாயகராக பணியாற்றினார். இப்போது அவர் சபாநாயகராக இருந்தார். அரசியல் சூழ்நிலையால் அவர் பதவியை விட்டு சென்ற பிறகு நான் சபாநாயகராக பதவி ஏற்றுள்ளேன். சிறப்பாக செயல்பட்டு இந்த சபையின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை காப்பாற்றுவேன். ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அடிப்படை வசதிகள்
அனைத்து தொகுதிகளிலும் குறைகள் இருக்கின்றன. சபையில் உறுப்பினர்கள் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றார் போல் பணியாற்ற வேண்டும். பொது வாழ்க்கையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
இந்துத்துவா நமது வாழ்க்கையில் ஒரு நடைமுறை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளன. அரசு அதிகாரிகள் ஈடுபாட்டு உணர்வுடன் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு காகேரி பேசினார்.