ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூர் வனப்பகுதியில் முத்தையன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இந்த மாதம் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முத்தையன் சாமி கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளான நாகமரை, ராமகொண்டஅள்ளி, செல்லமுடி, பூச்சூர், ஏரியூர், மூங்கில்மடுவு, வத்தலாபுரம், பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. அப்போது குழந்தை வரம் வேண்டியும், நேர்த்திக்கடன் செலுத்தவும் பெண்கள் மற்றும் பக்தர்கள் தரையில் படுத்து கொண்டனர். சாமியை எடுத்து வந்தவர்கள் அவர்களை தாண்டி சென்றனர். பின்னர் முத்தையன் சாமி நாகமரை, கருங்காலிமேடு, காட்டூர், நெருப்பூர், காந்திநகர் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பொதுமக்கள் சாமி சிலை எடுத்து வருபவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்தனர்.
இதேபோன்று பூச்சூர் சென்றாய பெருமாள் சாமி கோவில், ராமகொண்டஅள்ளி அக்குமாரி அம்மன் கோவில், வத்தலாபுரம் தர்மசாஸ்தா கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆண்டியூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி பிரத்தியங்கரா வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், குபேர ஹோமம், நவகிரக அஸ்தர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து நவ பிரத்தியங்கரா யாகம், வேள்வி, லலிதா சகஸ்ரநாமம் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.