தென்காசி மாவட்டம் உருவாக்கும் சிறப்பு அதிகாரி திடீர் மாற்றம்

தென்காசி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-07-30 21:30 GMT
சென்னை, 

தென்காசி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம்

தமிழகத்தில் நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டமும், காஞ்சீபுரத்தில் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டமும் புதிதாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதை செயல்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக ஏ.ஜான் லூயிசும், செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக ஜி.கே.அருண் சுந்தர் தயாளனும் நியமிக்கப்படுவதாக கடந்த 26-ந் தேதியன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

திடீர் மாற்றம்

இந்த நிலையில், அந்த அரசாணையில் மாற்றங்களைக் கொண்டுவந்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் புதிய அரசாணை பிறப்பித்துள்ளார். அதன்படி, இரண்டு சிறப்பு அதிகாரிகளுக்கும் புதிய மாவட்ட உருவாக்கப் பணியிடம் மாற்றி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சர்க்கரை கூடுதல் இயக்குனர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், தென்காசி மாவட்ட உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அவர் உதவிகளை மேற்கொள்வார்.

தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஏ.ஜான் லூயிஸ், செங்கல்பட்டு மாவட்ட உருவாக்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரிக்கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அவர் உதவிகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்