வட மாநிலங்களில் பலத்த மழை, தமிழகத்தில் ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
கோவில்பட்டி,
தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் கர்நாடகா, மராட்டியம், குஜராத், மேற்குவங்காளம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு தீப்பெட்டி பண்டல்களை குடோன்களில் தேக்கி வைப்பதற்கு வியாபாரிகள் தயங்குகின்றனர்.
இதனால் தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தி குறைக்கப்பட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து தீப்பெட்டி உற்பத்தி குறைக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்‘ என்றார்.