வேடசந்தூரில் துணிகரம், வேளாண் அலுவலர் வீட்டில் பணம் திருட்டு

வேடசந்தூரில் வேளாண் அலுவலர் வீட்டில் பணம் திருடப்பட்டது.

Update: 2019-07-29 22:30 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் வேளாண்மை துறையில் வேளாண் அலுவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அவருடைய மனைவி மனோன்மணி. இவர்களுடைய மகள் ஜான்சிராணி. இந்தநிலையில் ஜான்சிராணியின் மகள் ரிதிக்‌ஷா, மகன் பிரசாந்த் ஆகியோருக்கு பழனி முருகன் கோவிலில் முடி எடுக்க முடிவு செய்தனர்.

இதற்காக சந்திரசேகரன் வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் முடி எடுத்து விட்டு அவர்கள் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே பழனி கோவிலுக்கு சென்றதால், பீரோவில் இருந்த நகைகளை மனோன்மணியும், ஜான்சிராணியும் அணிந்து சென்றனர். இதனால் அந்த நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூரில் கடந்த 24-ந் தேதி 2 வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது. தற்போது வேளாண் அலுவலர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்