விருதுநகர் பகுதியில் அணை, ஆற்றுப்படுகைகளில் அதிகரித்து வரும் மணல் கொள்ளை

விருதுநகர் பகுதியில் அணை மற்றும் ஆற்றுப்படுகைகளில் அதிகரித்து வரும் மணல் கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2019-07-29 22:30 GMT
விருதுநகர்,

மாவட்டம் முழுவதும் ஆற்றுப்படுகைகளிலும், வரத்து கால்வாய், ஓடை பகுதிகளிலும் அனுமதியின்றி மணல் அள்ளுவது நடைபெற்று வருகிறது. இது தவிர கண்மாய்களிலும், வரத்து கால்வாய்களிலும் மாவட்ட நிர்வாகம் சவடுமண் அள்ளுவதற்கு அனுமதி அளித்து இருந்த போதிலும் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட அளவிற்கு மேல் மணல் அள்ளி செல்லும் நடைமுறையும் இருந்து வருகிறது. இதனால் கிராமப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையே உள்ளது.

விருதுநகர் பகுதியில் ஆணைக்குட்டம் அணை, அர்ஜூனா ஆற்றுப்படுகை, வரத்து கால்வாய்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவது அதிகரித்து வருகிறது. ஆனைக்குட்டம் அணையிலும், அர்ஜூனா ஆற்றுப்படுகையிலும் ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து டிராக்டர்களிலும், லாரிகளிலும் மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் மணல் அள்ளிய வாகனங்களையும், ஜே.சி.பி.எந்திரங்களையும் பறிமுதல் செய்து மணல் அள்ளியவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் மணல் கொள்ளை சம்பவங்கள் நின்றபாடு இல்லை.

கடந்த 3 தினங்களில் அர்ஜூனா ஆற்றுப்படுகையிலும், ஆனைக்குட்டம் அணைப்பகுதியிலும் மணல் அள்ளியதாக ஜே.சி.பி. எந்திரமும், 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய நடைமுறைப்படி இல்லாமல் தற்போது மணல் கொள்ளையில் கைது செய்யப்படுபவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் நிலை இருந்துவந்த போதிலும் மணல் கொள்ளை சம்பவங்கள்அதிகரித்து உள்ளது.

போலீசாரால் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க முடியாதநிலையில் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவஇடங்களுக்கு சென்று மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்காமல் பல இடங்களில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழுக்களை நியமிப்பதுடன் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. நடவடிக்கை கடுமையாக்கப்பட்டால் தான் மணல் திருட்டை தடுக்கமுடியுமே தவிர தற்போது உள்ள நடைமுறை தொடர்ந்தால் மணல் திருட்டு மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்