கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த திருநங்கை சிகிச்சை பலனின்றி சாவு 3 பேர் கைது

போரிவிலியில் கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த திருநங்கை சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-07-29 22:00 GMT
மும்பை,

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த திருநங்கை ராக்கி ஷிண்டே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு ஜங்ஷனில் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். அப்போது, ஒரு காரில் இருந்த 2 வாலிபர்கள் பணம் கொடுக்காதற்காக அவர்களை திருநங்கை ராக்கி ஷிண்டே திட்டிவிட்டு சென்றார்.

இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்து, திருநங்கை ராக்கி ஷிண்டேயை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கினார்கள். பின்னர் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதில், படுகாயம் அடைந்த ராக்கி ஷிண்டே அருகில் உள்ள சதாப்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ராக்கி ஷிண்டே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக எம்.எச்.பி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் ராக்கி ஷிண்டேயை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் போரிவிலியை சேர்ந்த பிலால் மோமின் (வயது21), அப்ரிடி சேக்(32), மெமூது சேக்(39) என்பது தெரியவந்தது. தலைமறைவான இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்