பரங்கிப்பேட்டை அருகே, மீனவர்கள் கோஷ்டி மோதல் - 4 படகுகள் தீ வைத்து எரிப்பு
பரங்கிப்பேட்டை அருகே மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 4 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கடலூர்,
தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த அன்னங்கோவில் மீன்பிடி தள பகுதியில், வேறு பகுதியை சேர்ந்த சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்களை பிடித்து வந்தனர்.
இதற்கு பரங்கிப்பேட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்து இருந்தனர்.
இந்த நிலையில் சில மீனவர்கள் சுருக்குமடி வலைகளில் மீன்கள் பிடித்து, அதை அன்னங்கோவில் மீன்பிடி தளத்திற்கு கொண்டு செல்லாமல், பரங்கிப்பேட்டை வெள்ளாற்றங்கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து மற்ற மீனவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலையில் தங்களது படகுகளில் பரங்கிப்பேட்டை பகுதி கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக யாரேனும் மீன்களை கொண்டு வருகிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் இருந்து 3 விசைப்படகு மற்றும் ஒரு கண்ணா படகில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றங்கரைக்கு செல்வதற்காக அன்னங்கோவில் ஆறு வழியாக மீனவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர்.
இதைபார்த்த பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் அவர்களை நோக்கி படகில் வேகமாக சென்றனர். பரங்கிப்பேட்டை மீனவர்கள், தங்களை நோக்கி வருவதை கண்ட அவர்கள், தங்கள் படகுகளை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்று தப்பி ஓடினர்.
இதையடுத்து அந்த படகுகளை பார்த்தபோது, அதில் சுருக்குமடி வலைகள் மற்றும் அதன் மூலம் பிடிபட்ட மீன்கள் இருந்தன. இதையடுத்து அந்த மீனவர்கள் 4 படகுகளையும் தீ வைத்து எரித்தனர். இதில் 4 படகுகள், அதில் இருந்த மீன்கள், சுருக்குமடி வலைகள் தீயில் கருகின.
இதற்கிடையே அன்னங்கோவிலில் உள்ள தனியார் மீன் விற்பனை நிலையத்தையும், அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவங்களால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக நேற்று பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த சம்பவத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், மேற்படி சம்பவம் தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டரால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதை தொடர்ந்தும் கடலூர் மாவட்ட அனைத்து கிராம மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.