கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடியூரப்பா அரசு வெற்றி நிதி மசோதாவும் நிறைவேறியது

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின்னர் நிதி மசோதாவும் நிறைவேறியது.

Update: 2019-07-30 00:15 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது.

அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், அந்த அரசு பெரும்பான்மையை இழந்தது. கடந்த 23-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் 29-ந் தேதி (அதாவது நேற்று) பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று எடியூரப்பா அறிவித்தார். அதன்படி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், முதல்-மந்திரி எடியூரப்பா, தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானம் மீது எடியூரப்பா பேசியதாவது:-

“கர்நாடகத்தில் மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் முதல்-மந்திரி பதவி எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு காரணமான மக்கள், பிரதமர் மோடி, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த 14 மாதங் களில் ஆட்சியின் குறைகளை நாங்கள் எடுத்து சொல்லியிருப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசவில்லை.

கர்நாடகத்தில் கடந்த 14 மாதங்களாக ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. இதை சரியான திசையில் கொண்டு செல்ல நான் முன்னுரிமை அளிப்பேன். நான் பழிவாங்கும் அரசியலை செய்ய மாட்டேன். மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிப்பேன். என்னை எதிர்ப்பவர்களையும் பரிவுடன் பார்ப்பேன். கவர்னர் அனுமதி வழங்கியதால் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். சரியான மழை பெய்யாததால், 80-க்கும் அதிகமான தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது.

அந்த பகுதிகளில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வேன். பிரதமரின் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. அத்துடன் மாநில அரசு ரூ.4,000 வழங்குவதாக நான் முதல் நாளிலேயே அறிவித்தேன். விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் எனது இரண்டு கண்கள் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். அதன்படி நெசவாளர்களின் கடனை ரூ.100 கோடி தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளேன்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வார்கள். அதற்கேற்ப நான் பணியாற்றுவேன். நான் தாக்கல் செய்துள்ள இந்த நம்பிக்கை தீர்மானத்தை அனைத்துக்கட்சியினரும் ஆதரிக்க வேண்டும். நான் ஏதாவது தவறு செய்வதாக தெரிந்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் என்னிடம் புகார் தெரிவிக்கலாம். அதை திருத்திக்கொள்ள தயாராக உள்ளேன். போராட்டம் மூலம் நான் இந்த பதவிக்கு வந்துள்ளேன். எனது பொறுப்பு என்ன என்பது எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை துரோகம் செய்யமாட்டேன்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிய தாவது:-

“காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி நடத்தினோம். இந்த 14 மாதங்களில் குமாரசாமி சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினோம். 5 ஆண்டுகள் நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை நடத்தினேன். கடந்த 14 மாதங்களில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துவிட்டதாக எடியூரப்பா கூறினார். இது தவறு.

நாங்கள் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை உருவாக்கி அதன்படி திட்டங்களை செயல்படுத்தினோம். விவசாய கடன் தள்ளுபடி, தனியார் கடன் தள்ளுபடி என்று பல்வேறு திட்டங்கள் கூட்டணி அரசில் அமல்படுத்தப்பட்டன. மக்களின் விருப்பப்படி இந்த அரசு அமைந்துள்ளதாக எடியூரப்பா கூறுகிறார். இது தவறு.

மக்களின் விருப்பப்படி இந்த அரசு அமையவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. கர்நாடக வரலாற்றில் எடியூரப்பாவுக்கு எப்போதும் மக்களின் முழுமையான ஆதரவு இல்லை. இது எடியூரப்பாவின் துரதிர்ஷ்டம் ஆகும். நீங்கள் (எடியூரப்பா) தாக்கல் செய்துள்ள இந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு எங்களது ஆதரவு இல்லை. நிலையான ஆட்சி நிர்வாகத்தை எடியூரப்பாவால் வழங்க முடியாது. இந்த அரசு, மக்களின் விருப்பத்திற்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

அதைத்தொடர்ந்து குமாரசாமி பேசி முடித்த பிறகு, எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு வெற்றி பெற்றது. அதன் பிறகு 3 மாதத்திற்கு தேவையான நிதி மசோதாவை எடியூரப்பா தாக்கல் செய்தார். அந்த மசோதாவுக்கு சபை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்தது. இதில் பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. காங்கிரசுக்கு 66 எம்.எல்.ஏ.க்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 34 பேரும் இருந்தனர். இந்த சூழ்நிலையில் சட்டசபையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இருப்பது உறுதியாக இருந்ததால், வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் விதானசவுதா பக்கம் வரவில்லை. சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ், பா.ஜனதா வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்