மன்னார்குடி அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாய்க்காலை மீட்க வேண்டும் நகராட்சி ஆணையரிடம், கிராம மக்கள் கோரிக்கை

மன்னார்குடி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2019-07-29 22:45 GMT
மன்னார்குடி,

மன்னார்குடியை அடுத்த காரிக்கோட்டை கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள் அரசு கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பதி தலைமையில் நேற்று மன்னார்குடி நகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் 600 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தின் வழியாக நகராட்சிக்கு சொந்தமான 100 அடி அகலமுள்ள கம்சன் வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் காரிக்கோட்டை, மேலவாசல் மற்றும் நெடுவாக்கோட்டை ஆகிய கிராமங்களை சோந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

வாய்க்கால் ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் காரிக்கோட்டை வழியாக புதுஆறு வெட்டிய பிறகு கம்சன் வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. இதனை பயன்படுத்திகொண்டு தனியார் ஒருவர் கம்சன் வாய்க்காலை தூர்த்து தனது நிலத்துடன் இணைத்துள்ளார். மேலும் நெடுவாக்கோட்டை காளியம்மன் கோவிலில் இருந்து காரிக்கோட்டை ஆதிதிராவிட தெருவிற்கு போடப்பட்ட இணைப்பு சாலையையும் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சிக்கிறார்.எனவே ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்கால், சாலையை மீட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்