சேந்தமங்கலம் பகுதியில் கனமழை விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது அரசு பள்ளிக்கு விடுமுறை

சேந்தமங்கலம் பகுதியில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Update: 2019-07-29 22:00 GMT
சேந்தமங்கலம், 

சேந்தமங்கலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. நேற்று முன்தினமும் சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சேந்தமங்கலத்தில் உள்ள பிரசித்திபெற்ற சோமேஸ்வரர் தெப்பக்குளம் மழையால் நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் தெப்பக்குளத்தின் உபரிநீர் வழிந்தோடி அருகில் உள்ள செங்கல் சூளைக்குள் புகுந்தது. அதனை வெளியேற்றிய செங்கல் சூளை தொழிலாளர்கள் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கவலை தெரிவித்தனர்.

இதேபோல சேந்தமங்கலம் பஸ் நிலையம் அருகில் பரபரப்பாக இயங்கும் வாரச்சந்தை பகுதியில் மழைநீர் தேங்கியதால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். சேந்தமங்கலம் மற்றும் பச்சுடையாம்பட்டி பகுதிகளில் இயங்கிவரும் கருப்பு மண் பிரித்தெடுக்கும் சிறிய ஆலைகளுக்குள்ளும் மழைநீர் தேங்கியது. இதனால் தொழில் சற்று பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கனமழையின் காரணமாக சேந்தமங்கலம், பொட்டணம், அக்கியம்பட்டி போன்ற பகுதி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளங்கள்போல் காட்சி அளித்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்ததாகவும், இது விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளத்தில் ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. அதன் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த கனமழையால் அப்பள்ளியின் வகுப்பறைகளுக்கு செல்லும் நுழைவு பகுதியில் மழைநீர் சூழ்ந்து நின்றது. நேற்று காலை வரை அந்த நீர் வடியவில்லை. நேற்று காலை பள்ளிக்கு வந்த சில ஆசிரியர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் தெரிவித்தனர். உடனே அவர் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர்களது ஆலோசனையின்பேரில் மழைநீரால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க நேற்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திற்குள் சூழ்ந்த மழைநீரை அகற்றினார்கள்.

மேலும் செய்திகள்