குமாரபாளையத்தில் வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

குமாரபாளையத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-07-29 22:15 GMT
குமாரபாளையம் ,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பண்டகஹள்ளியை சேர்ந்தவர் துரைசாமி மகன் செல்வம் (வயது 54). ஜவுளி வியாபாரி. இவரது மருமகன் சிவசங்கர் (30). நேற்று முன்தினம் இரவு ஜவுளி எடுப்பதற்காக இருவரும் ஈரோடு வந்திருந்தனர். ஜவுளி எடுத்து முடித்தபின் நேற்று காலை 7 மணியளவில் காரில் செல்வமும், சிவசங்கரனும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சிவசங்கர் ஓட்டி வந்தார்.

பள்ளிபாளையம் - சங்ககிரி சாலையில் உப்புபாளையம் என்ற இடத்தில் வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஒரு வேப்ப மரத்தில் மோதியது. இதில் முன்பக்க சீட்டில் இடதுபுறமாக அமர்ந்திருந்த செல்வம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சிவசங்கரன் லேசான காயத்துடன் குமாரபாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் ஆலப்புழை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா (21). கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (21). இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தனர். இருவரும் கல்லூரிக்குச் செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பைபாஸ் ரோட்டில் வரும்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஹரிகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பலியானார். பின்புறமாக அமர்ந்து வந்த ஆதித்யா படுகாயத்துடன் ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரு விபத்துகள் குறித்தும் குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்