ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம், குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் ஆதிவாசி மக்கள் மனு

குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் ஆதிவாசி மக்கள் மனு அளித்தனர்.

Update: 2019-07-29 22:15 GMT
ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடலூர் தாலுகா தெப்பக்காட்டில் தேக்குபாடி, கேம்பாடி, லைட்பாடி, கார்குடி ஆகிய கிராமங்களில் பெட்ட குரும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர் உள்ளிட்ட ஆதிவாசி இன 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஆதிவாசி மக்கள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு கார்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இது மருத்துவ உதவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

பெண்கள் பிரசவத்திற்காக தொலைவில் உள்ள ஊட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும். எனவே ஆதிவாசி மக்களின் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெறும் வகையில் கார்குடியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தெப்பக்காட்டில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தெப்பக்காடு சிறப்பு ஆதிவாசி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 6 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளனர். அங்கு தற்போது யானை பாகன், உதவியாளர் என 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் கேட்கின்றனர். சான்றிதழுக்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு இந்த மாவட்டத்தில் சான்றிதழ் தர இயலாது என்றும், சொந்த ஊரான பொள்ளாச்சி ஆனைமலையில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு சென்றால் நீலகிரி தான் உங்களது பூர்வீகம் என்று கூறுகிறார்கள்.

இதனால் எங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கடினமாக உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திலேயே சான்றிதழ்கள் வழங்கவும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்