கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி சோப்பு கம்பெனி ஊழியர் சாவு

கிருஷ்ணகிரியில் அணையில் மூழ்கி சோப்பு கம்பெனி ஊழியர் பலியானார்.

Update: 2019-07-29 22:30 GMT
கிருஷ்ணகிரி,

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மயில்சாமி (வயது 30). இவர் சோப்பு கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் 2 பேருடன் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வந்தார்.

அங்கு நண்பர்களுடன் அணையை சுற்றி பார்த்த அவர் மாலை 3.30 மணி அளவில் அணையின் பின்புறமாக தண்ணீர் செல்லக்கூடிய பகுதிக்கு குளிக்க சென்றார்.

அவர்கள் 3 பேருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் குளித்து கொண்டிருந்த போதே மயில்சாமி ஆழமான பகுதிக்கு சென்றார். இதன் காரணமாக அவர் நீரில் மூழ்கினார். தங்கள் கண் முன்பு மயில்சாமி நீரில் மூழ்குவதை கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

மேலும், அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே மயில்சாமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மயில்சாமியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் மூழ்கி நேற்று முன்தினம் பெங்களூருவை சேர்ந்த தையல் தொழிலாளி சண்முகம் என்பவர் பலியானார். இதன் தொடர்ச்சியாக நேற்று சோப்பு கம்பெனி ஊழியர் மயில்சாமி நீரில் மூழ்கி பலியாகி உள்ளார். நேற்று முன்தினம் சண்முகம் இறந்த உடன் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருப்பதற்காக போலீசார், பொதுப்பணித்துறையினர் உதவியுடன் பெரிய குழியை தோண்டி இருந்தனர்.

மேலும் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி குளிக்க சென்ற மயில்சாமி மூழ்கி பலியாகி உள்ளார். ஆபத்தான அந்த இடத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் பேனர்கள் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்