பர்கூர் பேப்பர் குடோன் தீ விபத்து: 2-வது நாளாக தீயை அணைக்க போராடிய வீரர்கள்
பர்கூரில் பழைய பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள்.
பர்கூர்,
பர்கூரில் ஜெகதேவி சாலையில் வசித்து வருபவர் கண்ணூர் முருகன்(வயது 65). இவர் வீட்டின் பின்புறம் பழைய பேப்பர், இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் பகல் 11.30 மணி அளவில் திடீரென்று அந்த குடோனில் தீப்பிடித்தது. நேரம் ஆக ஆக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் கட்டுக்குள் வரவில்லை.
பிளாஸ்டிக் குடோனை சுற்றிலும் 20 அடி உயரத்திற்கு தகரத்தால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 7 மணி நேரத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்கள் தகர வேலிக்குள் இருந்ததால் இரவிலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு வரை தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
நேற்றும் 2-வது நாளாக தீ எரிந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக 2-வது நாளாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பொருட்கள் மற்றும் குடோன் கூடாரம் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.