பர்கூர் அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பர்கூர் அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-29 22:45 GMT
பர்கூர், 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து நாமக்கல்லிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாண்டமங்கலத்தை சேர்ந்த அஜய்குமார் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். அந்த டேங்கர் லாரி நேற்று காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தமிழக - ஆந்திர எல்லையான குருவிநாயனப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கரில் நிரப்பப்பட்டிருந்த சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தஅந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நிலைய வீரர்கள் பழனி, கோவிந்தசாமி, மரியண்ணன், சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலையில் இருந்த எண்ணெய் பசையை அகற்ற சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்