விவசாயிகளை கண்டு கொள்ளாமல் 8 வழிச்சாலையை அமைப்பதிலேயே முதல்-அமைச்சர் ஆர்வமாக உள்ளார் அய்யாக்கண்ணு பேட்டி
விவசாயிகளை கண்டு கொள்ளாமல் முதல் 8 வழிச்சாலையை அமைப்பதிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக உள்ளார் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
திருவண்ணாமலை,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் நேற்று மதியம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மனு அளித்து உள்ளோம். தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இதுபோன்ற வறட்சி வந்ததே கிடையாது. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். நதிகளை இணைக்க அரசு நடவடிக்கை வேண்டும்.
வெள்ளத்தினால் 1 லட்சம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்குகிறது. இந்த தண்ணீரில் 200 டி.எம்.சி. தமிழகத்திற்கு திருப்பிவிட்டால் பாலாறு செல்வம் செழிக்கும் பகுதியாக மாறிவிடும். கடுமையான வறட்சியை கருத்தில் கொண்டு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் அதற்கான அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும். வறட்சி மாநிலமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை 3 ஆண்டுகள் ஒத்தி வைக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை குடிநீருக்காக மட்டுமே வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விளைபொருட்களுக்கு நாங்கள் காப்பீடு தொகை கட்டி உள்ளோம்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டுக்கான காப்பீடு தொகையை இன்னும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கவில்லை. 2016-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே காப்பீடு தொகையை முழுமையாக கலெக்டர் வாங்கி தர வேண்டும். இல்லை என்றால் தலைமை செயலகத்தில் தற்கொலை போராட்டம் நடத்துவோம்.
மேலும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலையை அமைப்பதிலேயே ஆர்வமாக உள்ளார். ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க அரசு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.