விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் விசைப்படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம்

ஏற்காட்டில் நேற்று விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விசைப்படகு சவாரி நிறுத்தப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2019-07-28 22:15 GMT
ஏற்காடு, 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இங்கு பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோவில் உள்ளிட்டவை கண்டுகளிக்க கூடிய இடங்களாக உள்ளன. இதனால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு செல்கின்றனர்.

இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று ஏராளான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பெண்கள், இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இதமான சூழலும் நிலவியது.

அதே நேரத்தில் ஏற்காடு ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் விசைப்படகு சவாரி மட்டும் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் மிதிபடகு, துடுப்பு படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சிறிதளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.

மேலும் செய்திகள்