பொதுமக்களிடம் ரூ.60 லட்சம் மோசடி பஸ் டிரைவர் உள்பட 11 பேர் கைது
பாலக்கோடு பகுதியில் இந்திய பணத்தை அமெரிக்க டாலராக மாற்றி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த பஸ் டிரைவர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40). இவர் மாரண்டஅள்ளி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் திருச்சி திருமுருகன் நகரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் தர்மலிங்கம் (40) உள்பட 11 பேர் இந்திய பணத்தை அமெரிக்க டாலராக மாற்றி தருவதாகவும், ரூ.1 லட்சம் செலுத்தினால் நாள் ஒன்றுக்கு 514-ம், மாதம் ரூ.15 ஆயிரத்து 435 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். இதனால் நான் மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரூ.60 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்தோம்.
ஆனால் அவர்கள் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. அவர்களிடம் பணத்தை கேட்ட போது ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் வரும் என்று கூறினர். ஆனால் 6 மாதமாக அவர்கள் கூறியபடி பணம் கிடைக்கவில்லை. இதனால் அவர்களிடம் கட்டிய பணத்தை திரும்ப கேட்ட போது தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேல்முருகன் உள்ளிட்ட பலரை இந்த கும்பல் ஏமாற்றி ரூ. 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் மாரண்டஅள்ளியில் ஒரு விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 11 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்கவேல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கோடங்கிப்பட்டி செந்தில்குமார்(50), பாலக்கோடு சி.டி.பெட்டகம் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபால்(70), சீரியம்பட்டி ஆத்துக்கொட்டாய் வீரமணி(54), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பக்கமுள்ள கெட்டூர் சீனிவாசன்(52), திருமல்வாடி முருகன்(62), சீங்கேரி துரை(60), முக்களியூர் ராமமூர்த்தி(54), கொட்டாவூர் பாலமுருகன்(36), சி.டி.பெட்டகம் ஸ்ரீராமன்(70), பேகாரஅள்ளி கிருஷ்ணன்(47) ஆகியோர் என்பதும், பாலக்கோடு பகுதியில் பொதுமக்களிடம் பணம் ஏமாற்றி மோசடி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.