சென்னையில் 2-வது கட்டம் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான மண் பரிசோதனை நிறைவு
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான மண்பரிசோதனை நிறைவடைந்து உள்ளன. 2020-ம் ஆண்டு கட்டுமானப்பணிகளை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
இந்தநிலையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முன்னுரிமை அளிக்கப்பட்ட பாதையில் மண்பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை மற்றும் மேல்மட்டப் பாதைக்கான கட்டுமானம் அமைப்பதற்கு முன்பாக அந்தந்த பகுதிகளில் மண்ணின் உறுதி தன்மை குறித்து அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்வது வழக்கம். அந்தவகையில் சென்னையில் மெட்ரோ ரெயிலுக்கான முதல் கட்டப்பணியில் 50 முதல் 100 மீட்டர் இடைவெளியில் மண் பரி சோதனை செய்யப்பட்டது.
ஆனால் மெட்ரோ ரெயிலுக்காக தற்போது தொடங்க இருக்கும் 2-வது கட்டப்பணியில் 25 மீட்டர் இடைவெளியில் மண்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒப்பந்தக்காரர்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் மண்பரிசோதனை செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப எந்திரங்களை பயன்படுத்தப்படும்.
சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடங்க இருக்கும் மெட்ரோ ரெயில் பாதையில் மண்பரிசோதனை பணி முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளன. இந்த பகுதிகளில் 1,960 இடங்களில் மண் ஆய்வு சோதனை நிறைவு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் சோழிங்கநல்லூர்- சிப்காட் வரை 10.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் 250 இடங்களில் மண் சோதனை நடந்து வருகிறது. இந்தப்பணி வரும் செப்டம்பர் மாதம் நிறைவு செய்ய உள்ளனர்.
கலங்கரை விளக்கம்- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி இடையே உள்ள 8 கி.மீ. வரை உள்ள பாதையில் 320 இடங்களில் நடந்து வரும் மண்பரிசோதனை பணி வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும். மீனாட்சி கல்லூரி முதல் போரூர் வரை உள்ள 25 கிலோ மீட்டர் தூர பாதையில் 900 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
வடசென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் 20 மீட்டர் ஆழத்தில் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல் தென்சென்னைக்கு உட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் 10 மீட்டா ஆழத்திலேயே மேலோட்டமாக பாறைகள் காணப்படுகின்றன. இந்தப் பணியை 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே முடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதேபோல் மாதவரம் முதல் பெரம்பூர் வரை உள்ள பகுதிகளில் களிமண் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் பெரம்பூரில் இருந்து சோழிங்கநல்லூர், தரமணி - சோழிங்கநல்லூர் பகுதிகளில் 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பாறைகள் அதிகம் காணப்படுகிறது. மண் பரிசோதனை பணிகளை முடித்து கொண்டு 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளன.
கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாறைகள் காணப்படுகின்றன. 50 மீட்டர் நீளத்தில் பல்வேறு ஆழங்களில் பாறைகள் இருக்கின்றன. பாறை மற்றும் களிமண் இருப்பதால் கட்டுமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. காரணம் சுரங்கம் தோண்டும் போது அதற்கு ஏற்ப அதிக பலம் கொண்ட சுரங்கம் தோண்டும் எந்திரங்களை (டணல் போரிங் மிஷின்) பயன்படுத்துவோம். ஆனால் தளர்வான மண்ணும், பாறையும் கொண்ட அடுக்குகள் தான் கவலையடைய செய்கிறது. முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள 52 கிலோ மீட்டர் பாதையில் பெரும்பாலும் களிமண்ணும், பாறைகள் நிறைந்த பகுதிகளாக தான் இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரெயிலுக்காக முதல் கட்டபணியில் பாறைகள் அதிகம் காணப்பட்டதால் அண்ணாசாலையில் பெரும்பாலான இடங்களில் சுரங்கப்பாதைகள் 18 முதல் 30 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. அண்ணாசாலையில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்க முடியாமல் ரஷியா நாட்டு ஒப்பந்தக்காரர்கள் பணியை பாதியில் விட்டுவிட்டு சென்றனர். இதற்கு காரணம் முறையாக மண் பரிசோதனை செய்யாதது தான் காரணமாகும். எனவே தற்போது மண் பரிசோதனை முறையாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.