வேப்பூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பூர் அருகே இளம்பெண்ணை தாக்கி 11 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-27 21:45 GMT
வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மனைவி தீபிகா(வயது 25). சின்னத்துரை வெளிநாட் டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தீபிகா ஆதியூரில் உள்ள தனது மாமியார் கருப்பாயியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தீபிகா, கருப்பாயி ஆகியோர் காற்றுக்காக கதவை திறந்து வைத்தபடி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் மர்மநபர்கள் 2 பேர் நைசாக அவரது வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த தீபிகாவை 2 பேரும் தாக்கி கழுத்தை நெரித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார்.

உடனே மர்மநபர்கள் 2 பேரும், தீபிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினர். அவரது சத்தம் கேட்டு கருப்பாயியும் எழுந்தார். பின்னர் இருவரும் திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டர். அவர்களது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

மர்மநபர்கள் தாக்கியதில் தீபிகா காயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்