எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க நாளை கூடுகிறது : கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம்
கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பது தெரியவரும். அன்றைய தினமே 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பும் வெளியாக உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது.
கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை ஓட்டலில் தங்கியுள்ளனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றனர். இதன் காரணமாக கடந்த 23-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதனால் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.
கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பா.ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட ஆலோசனைக்கு பின்பு பா.ஜனதா மேலிடம் எடியூரப்பாவை முதல்-மந்திரியாக பதவி ஏற்க அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை எடியூரப்பா கவர்னர் வஜூபாய்வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் எடியூரப்பா முதல்-மந்திரியாக ஏற்க அழைப்பு விடுத்தார். அத்துடன்சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வஜூபாய்வாலா 31-ந்தேதி வரை காலக்கெடு விதித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மாலை எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆனால் மந்திரிகளாக யாரும் பதவி ஏற்கவில்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்பு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 31-ந்தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தாலும் கூட எடியூரப்பா நாளை(திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நாளை விதானசவுதாவில் கூடுகிறது. வருகிற 30-ந் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா பா.ஜனதா அரசின் நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடக சட்டசபையில் சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ. உள்பட 222 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேரின் ஆதரவு தேவையாக உள்ளது. ஆனால் 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். அந்த 13 எம்.எல்.ஏ.க்களும் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதுதவிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஸ்ரீமந்த் பட்டீல், நாகேந்திராவும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வரமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வாறு 13 எம்.எல்.ஏ.க்களும், ஸ்ரீமந்த் பட்டீல், நாகேந்திராவும் சட்டசபைக்கு வராத பட்சத்தில் பா.ஜனதாவின் 105 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்து விடுவார். தகுதி நீக்கத்திற்கு பயந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சாத்தியமில்லை. இதனால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பாரா? என்பது ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களின் கையில் தான் இருக்கிறது.
இதற்கிடையில், பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் தேவேகவுடா, குமாரசாமியிடம் வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க ஜனதாதளம்(எஸ்) கட்சியும் முன் வந்திருப்பதாகவும், அதுகுறித்து தேவேகவுடா, குமாரசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசின் நிதி மசோதாவும் 2 நாள் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் காங்கிரசில் சேர்க்க மாட்டோம் என்றும், அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்க மாட்டோம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை அடுத்து தன்னை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டதாகவும், அவர்களிடம் தான் பேசவில்லை என்றும் நேற்று சித்தராமையா கூறினார். இதனை மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மறுத்துள்ளனர். சித்தராமையாவை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், ராஜினாமாவை திரும்ப பெறமாட்டோம், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ள மாட்டோம் என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை அங்கீகரிப்பதா? அல்லது அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? என்பது குறித்து தீர்ப்பு கூற சபாநாயகர் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் சபாநாயகர் பதவியை ரமேஷ்குமார் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யாவிட்டால், சபாநாயகர் மீது சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் பா.ஜனதாவினர் முடிவு செய்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தடுத்த நாட்களும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.