கடந்த 3 கல்வி ஆண்டுகளில், மாவட்டத்தில் 8¾ லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 8¾ லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 34 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கும், 2018-19-ம் கல்வியாண்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2019-20-ம் கல்வியாண்டில் 4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல் புத்தக பைகள், கணித உபகரண பெட்டிகள், வண்ண பென்சில்கள், நில வரைபடங்கள், பள்ளி நாள்காட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 2017-18-ம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்ற 28 ஆயிரத்து 491 மாணவ- மாணவிகளுக்கும், 2018-19-ம் கல்வியாண்டில் 26,692 மாணவ- மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
2017-18-ம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நல நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 29,784 மாணவ- மாணவிகளுக்கும், 2018-19-ம் கல்வியாண்டில 30 ஆயிரத்து 73 பேருக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல் 2017-18-ம் கல்வியாண்டில் 1,65,447 மாணவ- மாணவிகளுக்கும், 2018-19-ம் கல்வியாண்டில் 1,60,658 பேருக்கும் காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. 2019-20-ம் கல்வியாண்டில் 3,76,501 பேருக்கு காலணிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் 2017-18-ம் கல்வியாண்டில் 76,911 மாணவ- மாணவிகளுக்கும், 2018-19-ம் ஆண்டில் 80 ஆயிரத்து 77 பேருக்கும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 3 கல்வியாண்டுகளில் 8,71,886 மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களும், கல்வி உபகரணங்களும், 7,20,365 பேருக்கு புத்தக பைகளும், 55,183 பேருக்கு மடிக்கணினிகளும், 59,857 பேருக்கு சைக்கிள்களும், 2,34,357 பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.