மாணவிகள் செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுரை
நாமக்கல் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த கலெக்டர் ஆசியா மரியம், மாணவிகள் செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியில் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மாணவிகள் தங்கும் அறைகள், படுக்கை வசதிகள், உணவுக்கூடம், படிக்கும் பகுதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மாணவிகளிடம் விடுதியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். விடுதியில் தங்கி உள்ள மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு சமைக்கப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவிகளிடம் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:-
கல்லூரி படிப்பானது முக்கியமான காலகட்டமாகும். கல்லூரி முடித்த பின்னர் வேலைக்கு செல்லும் வகையில் நீங்கள் அனைவரும் அரசு வேலைக்கும், போட்டி தேர்வுகளுக்கும் தயார் செய்ய வேண்டும். வீட்டில் தனியாக படிப்பதை விட விடுதியில் தங்கி, உள்ள மாணவிகள் தாங்கள் படித்ததை உடன் உள்ள மாணவிகளுடன் கலந்துரையாடும்போது, சரியான விடைகளை நன்கு புரிந்து படிக்க முடியும். மாணவிகள் செல்போனில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். நேரத்தை சரியான முறையில் செலவிட்டு, தங்களுக்கு படிக்க கிடைத்்்த வாய்ப்பை பயன்படுத்தி, நல்ல நிலைக்கு முன்னேற்றம் கண்டு பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு, மருந்து வழங்கும் பகுதி, புற நோயாளிகள் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விசாரித்தார். மருந்துகளின் இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டு, தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளதா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) இலாஹிஜான் உள்பட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.