சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி சாவு ரேஷன் கடைக்கு சென்ற போது பரிதாபம்

சூளகிரி அருகே ரேஷன் கடைக்கு சென்ற போது காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-07-27 23:00 GMT
ஓசூர் ,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது சின்ன பாப்பனபள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்கர்லப்பா. இவருடைய மனைவி முனியம்மா(வயது 60). இவர் நேற்று முன்தினம் மாலை அங்கொண்டபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் முனியம்மா வீடு திரும்பவில்லை. இரவு வரையிலும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், ரேஷன் கடை, உறவினர்கள் வீடுகள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் முனியம்மாவை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று ஏ.செட்டிப்பள்ளி காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரது பிணம் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இறந்தது முனியம்மா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து இறந்தது முனியம்மா தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

வனத்துறையினரின் விசாரணையில் முனியம்மா ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை தாக்கி, துதிக்கையால் தூக்கி வீசியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முனியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சூளகிரி அருகே ரேஷன் கடைக்கு சென்ற போது காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்