அரசு பள்ளிகளில் நிதி இல்லாததால் கல்விக்காக தொலைக்காட்சி வாங்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில் நிதி இல்லாததால் கல்விக்காக தொலைக்காட்சி வாங்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2019-07-27 22:15 GMT
திருப்பரங்குன்றம்,

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அறிவுசார்ந்த ஆக்கபூர்வமான கல்வி செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதெரிந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக கல்வி தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

இதனையொட்டி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் செட்டாப் பாக்ஸ் வழங்கி உள்ளது. ஆனால் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படவில்லை. இதே சமயம் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதியில் இருந்து தொலைக்காட்சி பெட்டி வாங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கல்விக்காக தொலைக்காட்சி பெட்டி வாங்கப்படாத நிலை உள்ளது. ஒரு சில அரசு உயர் நிலைப்பள்ளிகளில் பெயருக்கு பழைய கலைஞர் டி.வி.யை வாங்கி வைத்துள்ளனர். அதுவும் செயல்பாடு இல்லாமல் தலைமை ஆசிரியரின் அறையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருஅரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, கல்வி தொலைக்காட்சிக்காக செட்டாப் பாக்ஸ் மட்டுமே அரசு வழங்கி உள்ளது. டி.வி.வாங்குவதற்கு ஏற்ப பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதிஇல்லை. அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்ட டி.வி.யை வேறு வழி இல்லாமல் காசு கொடுத்து வாங்கி வைத்துள்ளோம்.

சில கிராம புறங்களில் அரசு தொலைக்காட்சி தெரியவில்லை. நகர்புறங்களில் இருந்து தனியார் கேபிள் ஆபரேட்டர் மூலம் பள்ளிகளுக்கு அரசுதொலைக்காட்சி இணைப்பு பெறுவதற்கு என்று குறைந்த பட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். அதற்கு நிதி இல்லை. எனவே பெரும்பாலான பள்ளிகளில் டி.வி. வாங்கப்படவில்லை டி.வி.க்கான இணைப்பு வசதியும் செய்யப்படாத நிலை உள்ளது என்றார்.

மாணவ, மாணவிகள் கூறும்போது, கல்வி தொலைக்காட்சி திட்டத்தை வரவேற்கிறோம். இந்த திட்டத்தை தொலைநோக்கில்சீராக செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிகளுக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்கியது போல ஒவ்வொரு பள்ளிக்கும் பெரிய அளவிலான தொலைக்காட்சி மற்றும் கிராம புறங்களில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வசதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்