ஆபத்தில் இருக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க தூண்டில் செயலி பயன்படுத்த மீன்வளத்துறை அறிவுரை

ஆபத்தில் இருக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க ஏதுவாக அனைத்து மீனவர்களும் தங்களின் செல்போனில் தூண்டில் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள மீன்வளத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Update: 2019-07-27 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இயற்கை சீற்றங்களினால் வழி தவறி செல்வதும், படகு சேதமடைந்து பாதிக்கப்படுவதும், எல்லை தாண்டி செல்வதாக இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சமயங்களில் எந்த படகில், எத்தனை மீனவர்கள், அவர்கள் விபரங்கள், எந்த இடம், கடல் எல்லை போன்ற விபரங்களை தெரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன.

குறிப்பாக இதுபோன்ற சமயங்களில் விவரங்களை பெறுவதற்கு பல மணி நேரங்கள் ஆகிவிடுகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் மீனவர்களுக்கென அரசால் உருவாக்கப்பட்டுள்ள தூண்டில் செயலியை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த செயலியில் மீனவர்கள் விவரங்கள், பதிவு எண், பருவநிலை, அதிகளவில் மீன்கள் உள்ள இடம், நேரடி பார்வை, மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்து கொள்ள முடியும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு இந்த செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டாலே போதும். விபத்து உள்ளிட்ட ஆபத்துகளில் சிக்கி கொண்டால் உடனடியாக அவர்களின் விவரங்களை அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்று காப்பாற்ற முடியும்.

மேலும் அருகில் உள்ள படகுகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆபத்தில் சிக்கிய மீனவர்கள் தங்களின் இடத்தில் இருந்து நேரடியாக தங்களின் நிலையை வீடியோ காட்சி மூலம் தெரிவிக்க முடியும்.

எனவே கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் தங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், மீன்பிடி பகுதிகளை கண்டறிந்து அதிகளவில் மீன்களை பிடிக்கவும், பேரிடர் மற்றும் ஆபத்து காலங்களில் வானிலை மற்றும் புயல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இந்த செயலியை அனைத்து மீனவர்களும் தங்களின் செல்போனில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு மீன்வளத்துறை, மத்திய அரசின் புவியியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி நிலையம், இந்திய வானிலை துறை ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள செயலி ஆகும்.

மேலும் செய்திகள்