வானூர் அருகே சம்பவம் மது விருந்தில் தகராறு; மாணவருக்கு கத்திக்குத்து, ரவுடிகள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

வானூர் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-27 22:45 GMT

வானூர்,

புதுவை உழவர்கரையை சேர்ந்தவர் சந்துரு(20). கேட்டரிங் கல்லூரி மாணவர். இவருக்கு நேற்று பிறந்தநாளாகும். இதையொட்டி தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள பூத்துறை முந்திரி தோப்பில் மது விருந்து கொடுத்தார். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆடல், பாடலுடன் உற்சாகமாக மதுபானம் அருந்தினர்.

அப்போது இந்த விருந்தில் கலந்து கொண்ட விஜய்–ஹரிஷ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சண்டையிட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த விஜய் தனக்கு தெரிந்த 2 ரவுடிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தில் அவர்களும் முந்திரிதோப்புக்கு விரைந்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அங்கிருந்து நைசாக நழுவினர். அப்போது விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து ஹரிஷை பிடித்து தாக்கினார்கள். இதில் அவருக்கு தலை, தோள் மற்றும் கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. இந்த தகராறை கண்ட பொதுமக்கள் வானூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் வருவதை அறிந்த விஜய் அவரது ரவுடி கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். கத்திக்குத்து காயமடைந்து மயங்கி கிடந்த ஹரிஷை மற்ற நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுவிருந்தில் கலந்து கொண்ட சந்துரு, சரண்ராஜ், விஷ்வா, கவின் ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய விஜய் மற்றும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்