திருமூர்த்தி அணையை தூர்வார அரசு அனுமதி - விவசாயிகள் மகிழ்ச்சி

திருமூர்த்தி அணையை தூர்வார அரசு அனுமதி அளித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2019-07-27 22:30 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. அணைக்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சிற்றாறுகள் ஓடைகள் மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது. அதை அடிப்படையாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர்் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. அது மட்டுமின்றி குடிமங்கலம், மடத்துக்குளம், கணக்கம்பாளையம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில் திருமூர்த்தி அணை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக தூர்வாரப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 60 அடியில் சுமார் 15 அடிக்கும் மேலாக சேறும் சகதியும் நிரம்பியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அணையை தூர்வாரும்படி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.ஆனால் ஒரிரு நாட்களில் மழைப்பொழிவு ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அணைகளில்் தூர்வாரும் பணிகள் இதுவரையில் நடைபெறவில்லை.

இந்த சூழலில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யவில்லை. இதன்காரணமாக திருமூர்த்தி அணையின் மொத்த நீர்பரப்பில் சுமார் 14 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் மணல்திட்டுக்களாகவும், பாறைகளாகவும் காட்சி அளித்து வருகிறது. இந்த சாதகமாக கொண்டு அணையை தூர்வாருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணை, உப்பாறுஅணை, பெரியகுளம், கரிசல்குளம், வளையபாளையம்குளம் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் திருமூர்த்தி அணையில் 50,600 கனமீட்டரும் உப்பாறுஅணையில் 29,579 கனமீட்டரும் பெரியகுளத்தில் 99,000 கனமீட்டரும்் கரிசல்குளத்தில் 18,750 கனமீட்டரும் வளையபாளையம்குளத்தில் 7,900 கனமீட்டரும் வண்டல் மண் அள்ளிக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும். இதன் காரணமாக அதில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தூர்வாரும் பணிகளை விரைவில் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்