ரன்னிமேடு அருகே மலைரெயில் பாதையில் உலா வந்த காட்டுயானை

ரன்னிமேடு அருகே மலைரெயில் பாதையில் காட்டுயானை உலா வந்தது.

Update: 2019-07-27 22:00 GMT
குன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து உள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணித்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். மலைரெயில் பாதையில் குன்னூர் முதல் கல்லார் வரை இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி தொடர் மழையால் பசுமைக்கு திரும்பி உள்ளது.

இந்த நிலையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகில் காட்டுயானை ஒன்று மலைரெயில் பாதையில் உலா வந்தது. இதை கண்ட ரெயில்வே ஊழியர்கள் பீதி அடைந்தனர். அதன்பிறகு 15 நிமிடங்கள் கழித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் அந்த காட்டுயானை சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து மேற்கண்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டுயானை ஒன்று மலைரெயில் பாதையில் உலா வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்