தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டதால், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-27 22:15 GMT
ஓமலூர், 

சேலம் வழியாக சென்னைக்கும், வடமாநிலங்களுக்கும் தினமும் ஏராளமான பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சேலத்துக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது.

இந்த ரெயில் சேலம் அருகே உள்ள நாலுகால் பாலம் -வெள்ளாளப்பட்டிக்கும் இடையே பூசாரிகாடு் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் பாறாங்கல் ஒன்று இருந்தது. அதன் மீது ரெயில் என்ஜின் மோதியதில் பலத்த சத்தம் ஏற்பட்டது. ஆனால் ரெயிலுக்கு எந்தவித சேதமோ, அசம்பாவிதமோ ஏற்படவில்லை. இது பற்றி ரெயில் என்ஜின் டிரைவர் சேலம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பாறாங்கல் உடைந்து சிதறி கிடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சேலம் மாநகர துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் செல்வராஜ், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலாம்பாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கப்பன், ரவிவர்மன், ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியை சுற்றி உள்ள பொதுமக்களிடமும், வாலிபர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் அந்த பகுதிகளில் இரவு நேரத்தில், சில வாலிபர்கள் மது அருந்திவிட்டு, போதையில் தண்டவாளத்தில் பாறாங் கல்லை தூக்கி வைத்து இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்