அட்டகாசமான ‘பைசைக்கிள் கிக்’

ஒரு கால்பந்து வீரர், களத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான, அதேநேரம் அபாயகரமான சாகசம், ‘பைசைக்கிள் கிக்’.

Update: 2019-07-27 08:06 GMT
பின்புறமாகப் பல்டி அடித்தவாறே அந்தரத்தில் பந்தை உதைப்பதுதான், ‘பைசைக்கிள் கிக்’. இதைச் செய்தபிறகு சரியாக தரையில் விழாவிட்டால் சிக்கல்தான்.

புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் பீலே ‘பைசைக்கிள் கிக்’கில் திறமைசாலி. ஆனால் அவரே, இது அடிப்பதற்குக் கடினமானது என்று கூறியிருக்கிறார்.

போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ இன்னும் ‘பைசைக்கிள் கிக்’கில் திறமை பெற முயல்கிறார்.

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் லியோனிடாஸ் டா சில்வாவின் 100-வது பிறந்த நாளையொட்டி, கூகுள் தனது டூடுலில், ‘பைசைக்கிள் கிக்’கை அடிப்பது எப்படி என்று வெளியிட்டது. ‘ரப்பர் மனிதர்’ என்று அழைக்கப்பட்ட லியோனிடாஸ், ‘பைசைக்கிள் கிக்’கில் கில்லாடி.

இந்த உதை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, தென்அமெரிக்காவின் சிலி அல்லது பெரு நாடாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் பிறந்து சிலியில் கால்பந்து விளையாடிய ரேமன் உன்ஸாகா என்பவர்தான் முதன்முதலில் ‘பைசைக்கிள் கிக்’ அடித்தாராம்.

1914-ம் ஆண்டில், டல்காஹுவானோவில் நடந்த ஒரு கால்பந்து போட்டியில் அவர் முதல்முறையாக ‘பைசைக்கிள் கிக்’ அடித்ததாகக் கூறப்படுகிறது.

உன்ஸாகாதான் ‘பைசைக்கிள் கிக்’கின் தந்தை என்று சில கால்பந்து வரலாற்று ஆசிரியர்கள் கூறினாலும், பெரு நாட்டவர்கள் அந்தக் கூற்றை ஏற்க மறுக்கின்றனர்.

பெரு கால்பந்து வீரர்கள் அடித்துவந்த ‘பைசைக்கிள் கிக்’கைத்தான் உன்ஸாகா ‘காப்பி’ அடித்தார் என்றும், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெரு கால்பந்து வீரரே இந்தக் ‘கிக்’கை முதலில் ஆடியவர் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

இப்படி ‘பைசைக்கிள் கிக்’குக்கு பெரு, சிலி ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுவது ஒருபுறம் இருக்க, இன்றும் பல கால்பந்து வீரர்கள் கனவு காணும் திறமையாக ‘பைசைக்கிள் கிக்’ உள்ளது. வெகு சிலர் பேர்தான் இந்த அசாத்திய திறமை கை... மன்னிக்க, ‘கால்’ வரப் பெற்றிருக்கின்றனர்.

மேலும் செய்திகள்