3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ மும்பையில் இன்று கனமழை எச்சரிக்கை

பருவமழை தீவிரம் காரணமாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு‘ஆரஞ்சு அலர்ட்’விடப்பட்டு உள்ளது. மும்பையில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்எச்சரித்துஉள்ளது.

Update: 2019-07-27 00:25 GMT
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. மாநில தலைநகர் மும்பையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை விட்டு விட்டு பெய்தது. பின்னர் மாலை வெளுத்து வாங்கியது.

மாலை 5 மணி முதலே மும்பை பெருநகரம் முழுவதும் விடாமல் கனமழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது. கனமழையின் காரணமாக மாலை நேரத்தில் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக இயங்கின.

வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம் என்பதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மின்சார ரெயில்களில் பயணிகள் முண்டிஅடித்து கொண்டு ஏறினார்கள். ரெயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர். மும்பை மட்டுமின்றி தானே, நவிமும்பையிலும் பலத்த மழை பெய்தது.

இந்தநிலையில், இன்றும் (சனிக்கிழமை) மும்பையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுதவிர ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் மிக, மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்வதற்கு அரசு துறைகள் தயாராகி கொள்ளும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன் தானே மாவட்டத்திலும், பால்கர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்