மகள்-மருமகன் தற்கொலைக்கு காரணமான போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சூப்பிரண்டிடம் மூதாட்டி மனு

மகளும், மருமகனும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களது சாவுக்கு காரணமான போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.

Update: 2019-07-26 23:30 GMT
விருதுநகர்,

சிவகாசி அருகே உள்ள கங்கர்செவல் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி முத்தம்மாள்(வயது 61), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கணவரை இழந்த நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். எனது 2-வது மகளுக்கும், இளையரசனேந்தலை சேர்ந்த மாரிசாமிக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் தனியாக வசித்து வந்தனர். எனது மருமகன் கட்டிட தொழிலாளி. மகள் பட்டாசு தொழிலாளி. இந்தநிலையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ஒருவர் என் மகளிடம் நேரிலும், தொலைபேசியிலும் பாலியல் ரீதியாக தொல்லை செய்து வந்தார். இதனால் நான் அவரை சந்தித்து மகள் வாழ்க்கையை பாழாக்க வேண்டாம் என கேட்டு கொண்டேன். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மருமகன் மாரிச்சாமி அவரை சந்தித்து கண்டித்தார். அப்போது மாரிச்சாமியை அவமானப்படுத்தி பேசி உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மாரிச்சாமி கடந்த 1.11.2018-ல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். எழுத படிக்க தெரியாத என்னிடம் ஒரு வெள்ளைத்தாளில் கைரேகை பெற்றுக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக உண்மைக்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு சென்று கேட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர்.

பின்பு நான் படித்தவர்களிடம் காட்டி வழக்கு விவரத்தை கேட்டு தெரிந்து கொண்ட பிறகு அதிர்ச்சி அடைந்தேன். என் மகள், மருமகன் சாவுக்கு காரணமான போலீஸ்காரர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என் கேட்டபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் தெளிவான பதில் ஏதும் சொல்லவில்லை. விசாரணை நடத்துகிறோம் என கூறினார். 9 மாதங்களாகியும் அவர்களது சாவுக்கு காரணமான போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாலியல் ரீதியாக எனது மகளை துன்புறுத்தி அவளையும் அவரது கணவரையும் தற்கொலைக்கு தூண்டிய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்