நடப்பு மாதம் கூட்டணி அரசு எடுத்த முடிவுகள் ரத்து; பதவி ஏற்கும் முன்பே எடியூரப்பா அதிரடி உத்தரவு

நடப்பு மாதம் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளை ரத்து செய்து பதவி ஏற்கும் முன்பே எடியூரப்பா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Update: 2019-07-26 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. காங்கிரசை சேர்ந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்தார். அப்போது தான் கூட்டணி அரசுக்கு ஆபத்து தொடங்கியது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் கும்பலாக வந்து ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த 23-ந்தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு தோல்வியை தழுவியது. இதையடுத்து குமாரசாமி கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அதிகாரிகள் பணி இடமாற்றம், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது உள்பட பல்வேறு முடிவுகளை முதல்-மந்திரி குமாரசாமி அரசு எடுத்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக நேற்று பகல் அவர் கர்நாடக அரசின் தலைமை செயலாளருக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதாவது, நடப்பு மாதம் (ஜூலை) குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு எடுத்த அனைத்து முடிவுகளையும் ரத்து செய்யும்படி கூறியுள்ளார்.

பதவி ஏற்கும் முன்பே எடியூரப்பா எடுத்துள்ள இந்த முடிவால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்