திருச்சியில் புதுப்பொலிவுடன் மேஜர் சரவணன் நினைவகம் பீகார் ராணுவ அதிகாரி திறந்து வைத்தார்
திருச்சியில் புதுப்பொலிவுடன் மேஜர் சரவணன் நினைவகத்தை பீகார் ராணுவ அதிகாரி திறந்து வைத்தார்.
திருச்சி,
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் வீரமரணமடைந்தார். அவரது வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதான பாட்டலிக் கதாநாயகன், வீர சக்ரா விருது வழங்கப்பட்டது. இறந்த சரவணனின் குடும்பத்தினர் மேஜர் சரவணன் என்ற பெயரில் நினைவு அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் மேஜர் சரவணன் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவகம் தற்போது ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் அசோக சின்னம், ராணுவ படை முத்திரை, சரவணன் பணிபுரிந்த பீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி ராணுவ முறைப்படி இந்த நினைவகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். பீகார் ரெஜிமென்ட் பிரிகேடியர் நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மேஜர் சரவணன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மேஜர் சரவணன் நினைவாக தபால் தலையை நடராஜ் வெளியிட அதனை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
புதுப்பொலிவுடன் காணப்படும் இந்த நினைவகத்தின் முன்பு பலர் நேற்று தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாணவ-மாணவிகள் பலர் மேஜர் சரவணனின் நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.