ஆண்டிப்பட்டி அருகே, கரும்பு தோட்டத்தில் தீ - தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்
ஆண்டிப்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஒன்று கூடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து தோட்ட உரிமையாளர் கோட்டைச்சாமி க.விலக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.