திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நீரின்றி கருகி வரும் கரும்பு பயிர்கள் அரசு இழப்பீடு வழங்குமா?
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நீரின்றி கருகி வரும் கரும்பு பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கீழையூர், வேப்பங்குழி, பூண்டி, மனத்தாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமாக விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டுபோனது. இதனால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. இதனை பார்க்கும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடன் வாங்கி தற்போது கரும்பு பயிர் செய்துள்ளோம். தற்போது அரியலூர் மாவட்ட பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் நாங்கள் (விவசாயிகள்) பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். வாங்கிய கடனை எப்படி செலுத்தப்போகிறோம் என்று தவித்து வருகிறோம். இதனை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி விவசாய நிலங்களின் நீர்ப்பாசனத்திற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தால் வரும் காலங்களில் இப்பகுதி விவசாயிகளுக்கு இதுபோன்ற நிலை வராது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.