உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் திணறி வருகின்றனர்.
உடுமலை,
உடுமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பழனி சாலை, பொள்ளாச்சிசாலை, ராஜேந்திரா சாலை, பை-பாஸ் சாலை, அனுசம் சாலை, ஐஸ்வர்யாநகர் செல்லும் சாலை ஆகிய 6 சாலைகள் சந்திக்கும் இடத்தில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இடத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ரவுண்டானா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதில் பழனிசாலை-ராஜேந்திரா சாலை சந்திப்பு பகுதி மற்றும் பை-பாஸ் சாலை-பழனி சாலை சந்திப்பு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் பழனி சாலை - ராஜேந்திரா சாலை சந்திக்கும் இடத்தில் பழனி சாலையின் தென்புறம் வாகனங்கள் செல்வதற்கு சிறிதளவு வழி விட்டு மீதி இடங்களில் சாலையின் நடுவில் குழிதோண்டும் பணிகள் நேற்று நடந்தது. அங்கு பழனி சாலை, பை-பாஸ் சாலை வழியாக வந்த பஸ்கள் எப்போதும் போல் அந்த வழியாக மத்திய பஸ் நிலையம் பகுதி மற்றும் ராஜேந்திரா சாலைக்கு வந்தன.
ராஜேந்திரா சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் பழனி சாலைக்கு செல்வதற்கு பொள்ளாச்சி சாலையில் பழைய கார் நிறுத்தத்தை அடுத்துள்ள சிறிய இணைப்பு சாலை வழியாக பை- பாஸ் சாலைக்கு சென்று செல்லும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதற்காக போக்குவரத்து போலீசார் அங்கு நின்று வாகனங்களை திருப்பி விட்டனர்.
மத்திய பஸ்நிலையம் முன்பு இருந்து நேரடியாக கிழக்கு புறமாக பழனி சாலைக்கு செல்ல அனுமதியில்லை. அப்படிப்பட்ட நிலையில் பழனி சாலைக்கு செல்ல வேண்டிய சிலர், போலீசார் மாற்றியமைத்துள்ள மாற்றுப்பாதையில் செல்லாமல் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து செல்கின்றனர். அதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பணியில் இருக்கும் போது போலீசார் தெரிவிக்கும் அறிவுரைகளை மீறி வாகனங்களில் வருகிறவர்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடும் நேரத்தில் மற்றொரு பகுதியில் சிலர் மாற்றுப்பாதையில் செல்லாமல் குறுக்கே வழியில் செல்கின்றனர்.
அப்படிப்பட்ட நேரங்களில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்படுகிறது. அந்த இடத்தில் பணியில் உள்ள போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த திணறுகின்றனர். அதனால் அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க கட்டுமானப்பணிகள் நிறைவடையும் வரை அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.