விளாத்திகுளம் அருகே டிராக்டரில் தூங்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு வலைவீச்சு

விளாத்திகுளம் அருகே டிராக்டரில் தூங்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-25 22:30 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). பக்கத்து ஊரான இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (50). இவர்கள் 2 பேரும் விறகு கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் லெக்கம்பட்டியில் பொது இடத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை கருப்பசாமி வெட்டினார். இதுகுறித்து ராஜ்குமார் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வெட்டப்பட்ட சீமை கருவேல மரங்களை பொதுமக்கள் எடுத்து சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, லெக்கம்பட்டியில் உள்ள டீக்கடைக்கு தீ வைத்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பசாமியை கைது செய்தனர்.

இதனால் ராஜ்குமாருக்கும், கருப்பசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவில் ராஜ்குமார் லெக்கம்பட்டியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான தனது நிலத்தில் கரிமூட்டம் போடும் இடத்தின் அருகில் நின்ற டிராக்டரில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி கத்தியால் ராஜ்குமாரின் கழுத்தை அறுத்தார். உடனே கண் விழித்த ராஜ்குமார் அலறியவாறு தப்பியோட முயன்றார். எனினும் கருப்பசாமி கத்தியால் ராஜ்குமாரின் முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் குத்தினார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து கருப்பசாமி தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாருக்கு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். டிராக்டரில் தூங்கிய வாலிபரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்