நடத்தையில் சந்தேகம் கட்டையால் அடித்து மனைவி கொலை தொழிலாளி கைது

வேலூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தொழிலாளி, அவரை துன்புறுத்தி கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-07-25 22:45 GMT
வேலூர்,

வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரத்தை சோந்தவர் ஸ்டான்லி ஜான் (வயது 42), தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்டான்லி ஜானுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாவும், அதனால் அவர் மதுஅருந்தி விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

எனவே ஜெயந்தி தனது மகன்கள் 2 பேரையும் உறவினர்கள் வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் ஸ்டான்லி ஜான், மனைவி ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். அதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 23-ந் தேதி இரவு ஸ்டான்லி ஜான் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியின் நடத்தை மீதுள்ள சந்தேகத்தால் வீட்டில் கிடந்த கட்டையால் ஜெயந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் குடிபோதையில் இரவு முழுவதும் அவரை தூங்கவிடாமல் கட்டையால் அடித்து துன்புறுத்தி உள்ளார். அதனால் மனவேதனை அடைந்த ஜெயந்தி நேற்று முன்தினம் செல்போன் மூலம் வாலாஜாவில் வசிக்கும் தாயார் கஸ்தூரிபாயை தொடர்பு கொண்டு கணவரின் கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கஸ்தூரிபாய் நேற்று முன்தினம் மாலை ஜெயந்தி வீட்டுக்கு வந்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் ஜெயந்தி இறந்து கிடந்தார். ஸ்டான்லி ஜான் கட்டையால் ஜெயந்தியை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது. ஜெயந்தியின் உடலை கண்டு அவர் கதறி துடித்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிந்து ஸ்டான்லி ஜானை நேற்று கைது செய்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஸ்டான்லி ஜான் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை துன்புறுத்தி கட்டையால் அடித்து கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் இரவு முழுவதும் அவரை துன்புறுத்தி கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்