மாயாவதி பிறப்பித்த உத்தரவு எனக்கு தெரியாது - பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏ. என்.மகேஷ் சொல்கிறார்
கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கும்படி மாயாவதி பிறப்பித்த உத்தரவு எனக்கு தெரி யாது என்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், என்.மகேஷ். இவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். தேர்தலின் போது ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தார். இதனால் கூட்டணி அரசுக்கு அவர் ஆதரவு அளித்து வந்தார். அவருக்கு மாநில பள்ளி கல்வி துறை மந்திரி பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் மந்திரியாக பதவி ஏற்ற சில மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தார். அக்கட்சியின் தலைவி மாயாவதி, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து என்.மகேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. எங்கள் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் சார்பில் கொள்ளேகால் தொகுதியில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம் என்று மாயாவதி கூறினார். அதனால் நாங்கள் தனித்து போட்டியிட்டோம். இதில் எங்கள் கட்சி 4.12 லட்சம் ஓட்டுகள் பெற்றது.
கடந்த 23-ந் தேதி எங்கள் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபையில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மாயாவதியிடம் கேட்டேன். அதற்கு அவர், யாருக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலை வகிக்கும்படி கூறினார். இருப்பினும் சட்டசபை கூட்டம் நடைபெறும் போதும், எங்கள் கட்சியின் மூத்த தலைவரை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டேன். அவர் நடுநிலை வகிக்கும்படி கூறினார்.
இதையடுத்து கடந்த 16-ந் தேதியில் இருந்து எனது செல்போனை அணைத்துவிட்டு, தியான மையத்தில் தங்கினேன். இந்த நேரத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மாயாவதி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். நான் டுவிட்டர் பயன்படுத்துவது இல்லை. அதனால் மாயாவதி பிறப்பித்த உத்தரவு எனக்கு தெரியவில்லை.
என்னை கட்சியில் இருந்து மாயாவதி நீக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதுவும் டுவிட்டரிலேயே வெளியாகியுள்ளது. சரியான தகவல் தொடர்பு இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டுவிட்டது. மாயாவதியுடன் பேசுவேன். அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இந்த கூட்டணி அரசில் 4 மாதங்கள் நான் மந்திரியாக பணியாற்றினேன்.
மாயாவதி உத்தரவின்பேரில் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். எந்த தயக்கமும் இல்லாமல் பதவியை துறந்தேன். இப்போதும் நான் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். அரசியல் ரீதியாக நடுநிலையுடன் செயல்படுவேன்.
இவ்வாறு என்.மகேஷ் கூறினார்.