விபத்தை ஏற்படுத்தும் சாலையோர அடிகுழாயை அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையோர அடிகுழாயை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-24 22:00 GMT
சிவகாசி, 

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்தில் உள்ள ஆனையூர்-விளாம்பட்டி ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அடிகுழாய் அமைக்கப்பட்டது. இந்த அடிகுழாய் தற்போது பயன்பாடு இல்லாத நிலையில் தினந்தோறும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பகாலத்தில் சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அடிகுழாய் தற்போது சாலையோரத்தில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த அடிகுழாயில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். இரவு நேரங்களில் இந்த அடிகுழாய் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் போகிறது. இதனால் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

எனவே தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வரும் இந்த அடிகுழாயை அங்கிருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்