பசுமை வீடு கட்ட 14 பேருக்கு ஆணை கலெக்டர் வழங்கினார்
பசுமை வீடு கட்ட 14 பேருக்கு ஆணைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
மசினகுடி,
மசினகுடி அருகே ஆனைக்கட்டியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு ஊட்டச்சத்து பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
கர்ப்பிணிகளின் இறப்பு சதவீதத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்ப்பிணிகள் டாக்டர்களின் ஆலோசனைப்படி நல்ல ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் மருத்துவ சேவையை பழங்குடியின மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கூவமூலா பகுதியில் 31 பேருக்கு நத்த பட்டா வழங்கப்பட்டது. கூடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திசால் மற்றும் பணமுல்லா பகுதிகளில் 14 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய பசுமை வீடு கட்ட ஆணையை கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், இணை இயக்குனர்(சுகாதார பணிகள்) பொற்கொடி, திட்ட அலுவலர்(குழந்தை வளர்ச்சி திட்டம்) தேவகுமாரி, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், மோகனகுமார மங்கலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.