பொங்கலூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பொங்கலூர் அருகே பள்ளி மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-24 22:45 GMT

பொங்கலூர்,

பொங்கலூரை அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 39). தொழிலாளி. இவருடைய மகள் காயத்திரி (14). பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் காயத்திரியை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவருடைய பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளிக்கு தினசரி செல்லும் அரசு பஸ்சில் சென்றவர் பள்ளி முடிந்து மாலையில் மற்ற மாணவிகளுடன் வீடு திரும்பினார். இதற்கிடையில் வேலைக்கு சென்ற காயத்திரியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் மேல்பகுதியில் ஏறி ஓடுகளை அகற்றி வீட்டினுள் பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே விட்டத்தில் காயத்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயத்திரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காயத்திரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்