கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 4½ லட்சம் பேர் பயன் அதிகாரி தகவல்
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக இதுவரை 4½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அதிகரி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை பிரிவின் மாவட்ட அதிகாரி ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 2008 செப்டம்பர் 15-ந் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை கிருஷ்ணகிரியில் செப்டம்பர் 2009-ம் ஆண்டும், தர்மபுரியில் அக்டோபர் 2009-ம் ஆண்டும் கொண்டு வரப்பட்டது. விபத்தில் சிக்கி தவிப்பவர்களையும், கர்ப்பிணிகளையும் காப்பாற்றும் சேவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சேவையில் தற்போது கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பும் எந்த மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெறலாம். இந்த சேவையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மொத்தம் 48 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகன ஆம்புலன்சும் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் பைபாஸ் சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த அவசர சேவை தொடங்கியதில் இருந்து இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். அதில் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளும், 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களும் பயன் அடைந்துள்ளனர். அதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயன் பெற்றுள்ளனர். அதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளும், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களும் பயன் அடைந்துள்ளனர். 2 மாவட்டங்களிலும் இதுவரை 4 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
இதைத்தவிர 108 ஆம்புலன்சில் மருத்துவ பயிற்சி பெற்ற உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். 108 கட்டுப்பாட்டு மையம் மூலம் தகவல் பெறப்பட்டு குறிப்பிட்ட இடங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்களுக்குள் 108 ஆம்புலன்ஸ் சென்றடைகிறது. இந்த நேரத்தை மேலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜி.பி.எஸ். கருவி அனைத்து 108 ஆம்புலன்சிலும் பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆன்ராய்டு மொபைல் போன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மேலும் விரைவில் சேவை செய்ய 108 ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது. எனவே இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.