ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை ஒரு மாதத்தில் தொடங்கப்படுகிறது
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படுகிறது.
வேலூர்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய இந்த கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் காலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரம், மாலையில் பள்ளி முடிந்து வெளியே செல்லும் நேரம் பதிவு செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 445 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலேயே வந்ததாக கூறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை போன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 1,424, நடுநிலைப்பள்ளிகள் 416 உள்ளன. முதல் கட்டமாக 416 நடுநிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் தொடக்க பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்படும் என்றும் அவர்கள் கூறினர்.