அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலம் சமாதி ஆகிவிடும் - சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அவர்களின் எதிர் காலம் சமாதி ஆகிவிடும் என்றும் சட்டசபையில் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசினார்.

Update: 2019-07-23 23:53 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கடந்த 18-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றது. ஏற்கனவே நான் அளித்த வாக்குறுதியின்படி வாக்கெடுப்பை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், வாக்கெடுப்பை நாளைக்கு (நேற்று) ஒத்தி வைக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில், வாக்கெடுப்பு 23-ந் தேதி (நேற்று) மாலை 6 மணிக்குள் முடிக்கப்படும் என்று கூறி சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் காலை 10 மணிக்கு தொடங்கியது. பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால் ஆளுங்கட்சி வரிசையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஏ.டி.ராமசாமி உள்பட 6 பேர் மட்டுமே இருந்தனர். மற்ற இருக்கைகள் காலியாக இருந்தன.

இதை கண்டு சபாநாயகர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு ஏ.டி.ராமசாமி, “உறுப்பினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், வந்துவிடுவார்கள், அதற்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசட்டும்“ என்றார். அதன் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ஆளுங்கட்சிகளின் உறுப்பினர்கள் சபைக்கு வந்தனர். அதன் பிறகு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் பேசியதாவது:-

கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தங்கியுள்ளனர். அவர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் அரசியல் எதிர்காலம் சமாதியாகிவிடும். இன்னும் அவர்களுக்கு வயது உள்ளது. இதை பற்றி அவர்கள் சற்று யோசிக்க வேண்டும்.

ராஜினாமா செய்துவிட்டு மும்பைக்கு சென்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாளர்கள் அல்ல. திருப்தியாக இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை காட்டப்பட்டுள்ளது. ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவி, இன்னொருவருக்கு நீர்ப்பாசனத்துறை என்று பல்வேறு ஆசைகள் காட்டப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் குறுக்கிட்டு பேசும்போது, “மந்திரி டி.கே.சிவக்குமார், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திசை திருப்பும் நோக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர்களை மிரட்டும் தொனியில் மந்திரி பேசுகிறார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பொருந்தாது“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, “அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை திசை திருப்பி பா.ஜனதாவினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். கொறடா உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை. ஆனால் பா.ஜனதாவினர் தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். அரசியலமைப்பு சட்டம் மிக தெளிவாக கூறியுள்ளது“ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, “ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் மீது கொறடா உத்தரவு பிறப்பிக்காமலேயே தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும். தமிழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை. கட்சி விரோத செயல்கள் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அது, தற்போது ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.வுக்கும் பொருந்தும். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்“ என்றார்.

அப்போது மீண்டும் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வகையான தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனால் தமிழக சட்டசபை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுக்கும், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கும் தொடர்பு இல்லை“ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு, “இன்றைக்குள் (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் வக்கீல்கள் ஆஜராகி கூறியுள்ளனர். சித்தராமையாவுக்கு சட்டம் நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள இடைக்கால தீர்ப்பில், ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கொறடா உத்தரவு பொருந்தாது“ என்றார்.

மேலும் செய்திகள்